2-வது டெஸ்ட்: சிறப்பான பேட்டிங்.. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 247 ரன்கள் சேர்ப்பு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
கவுகாத்தி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்களாக சுப்மன் கில், அக்சர் படேலுக்கு பதிலாக சாய் சுதர்சன் மற்றும் நிதிஷ் ரெட்டி சேர்க்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் போஷுக்கு பதிலாக செனுரன் முத்துசாமி அணியில் இடம்பிடித்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - ரிக்கல்டன் களமிறங்கினர். இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. மார்கரம் 38 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். சிறிது நேரத்திலேயே ரிக்கல்டன் 35 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கினார்.
இதனையடுத்து ஸ்டப்ஸ் - கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 84 ரன்களில் பிரிந்தது. பவுமா 41 ரன்களிலும், ஸ்டப்ஸ் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் டோனி டி சோர்சி (28 ரன்கள்), வியான் முல்டர் (13 ரன்கள்) அகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் அடித்துள்ளது. செனுரன் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெர்ரைன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா, சிராஜ் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






