2-வது டெஸ்ட்: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்


2-வது டெஸ்ட்: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்
x

image courtesy:twitter/@BCBtigers

முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மிர்புர்,

அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்காளதேசம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 476 ரன்னும், அயர்லாந்து 265 ரன்னும் எடுத்தன. ‘பாலோ-ஆன்’ ஆன அயர்லாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 211 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 69 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு 509 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 87 ரன்னும், ஷத்மான் இஸ்லாம் 78 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 53 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் அடித்திருந்தது. கர்டிஸ் கேம்பர் 34 ரன்னுடனும், ஆன்டி மெக்பிரின் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. அயர்லாந்து அணி வெற்றிக்கு மேலும் 333 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்பிரின் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜோர்டான் நெய்ல் தனது பங்குக்கு 30 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேம்பர் உடன் கேவின் ஹோய் கை கோர்த்தார். டிரா செய்யும் நோக்கில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய இந்த ஜோடி ஏறக்குறைய 32 ஓவர்கள் தாக்குப்பிடித்தது. 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கேவின் ஹோய் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ சந்தித்த முதல் பந்திலேயே போல்டானார். இதோடு அயர்லாந்து அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சில் 113.3 ஓவர்களில் 291 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்காளதேசம் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

அயர்லாந்து தரப்பில் கேம்பர் 71 ரன்களுடன் (259 பந்துகள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வங்காளதேசம் தரப்பில் தைஜூல் இஸ்லாம் மற்றும் ஹசன் முரத் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகனாகவும், தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

1 More update

Next Story