அயர்லாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்


அயர்லாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்
x

image courtesy:ICC

அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

டாக்கா,

வங்காளதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 141.1 ஓவர்களில் 476 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 128 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 106 ரான்களும் அடித்தனர். அயர்லாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆன்டி மெக்பிரின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 2-வது நாளில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்களுடன் தடுமாறியது. டக்கர் 11 ரன்களுடனும், ஸ்டீபன் டோஹனி 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் முரத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 265 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டக்கர் 75 ரன்களும், ஜோர்டன் நெய்ல் 49 ரன்களும், ஸ்டீபன் டோஹனி 46 ரன்களும் அடித்தனர். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 211 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்து மொத்தம் 367 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஷாத்மன் இஸ்லாம் 69 ரன்களுடனும், மொமினுல் ஹக் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஹசன் ஜாய் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story