2-வது டி20 போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே


2-வது டி20 போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே
x

image courtesy:twitter/@ZimCricketv 

தினத்தந்தி 6 Sept 2025 8:24 PM IST (Updated: 7 Sept 2025 4:09 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஹராரே,

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான பிரையன் பென்னட் 19 ரன்கள், மருமணி 17 ரன்கள் அடித்து ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் (0), சிக்கந்தர் ராசா (2 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்வரிசையில் ரையான் பர்ல் (20 ரன்கள்), தஷிங்கா முசேகிவா (21 ரன்கள்) ஆகியோர் பொறுப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.

14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் அடித்த ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது. சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

1 More update

Next Story