2-வது ஒருநாள் போட்டி: 358 ரன்கள் அடித்தும் தோற்க இதுதான் காரணம் - இந்திய கேப்டன் பேட்டி

image courtesy:BCCI
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ராய்ப்பூர்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் (105 ரன்கள்), விராட் கோலி (102 ரன்) சதம் விளாசினர்.
பின்னர் 359 ரன் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 110 ரன்கள் விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் 358 ரன்கள் அடித்தும் தாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் கே.எல். ராகுல் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ 2வது இன்னிங்சில் பந்து வீசுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை வைத்து இது மறப்பதற்கு கடினமான தோல்வியல்ல. நாங்கள் கேட்கும்போது சில முறை பந்தை மாற்றும் அளவுக்கு நடுவர்கள் நன்றாக நடந்து கொண்டனர். ஆனால் இந்த போட்டியில் டாஸ் ஒரு பெரிய பங்கை வகித்துள்ளது.
நாங்கள் இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய விஷயங்கள் எப்போதும் இருக்கும். 350 ரன்கள் போதுமானது என்று நாங்கள் நினைத்தோம். அதே சமயம் ஈரமான பந்தை எங்களது பவுலர்கள் கையாள்வதற்காக எக்ஸ்ட்ரா 20 - 25 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நாங்கள் பேசினோம். பந்து வீச்சாளர்கள் தங்கள் முழு பலத்துடன் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன.
ருதுவையும் (ருதுராஜ் கெய்க்வாட்) அவர் பேட்டிங் செய்த விதத்தையும் பார்ப்பது அழகாக இருந்தது. விராட் இதை செய்வதை 53 முறை பார்த்திருக்கிறோம். அவர் தனது வேலையைச் செய்து கொண்டே இருக்கிறார். நாங்கள் அதைப் பார்த்துப் பழகிவிட்டோம். ருது பேட்டிங் செய்த விதம் அழகாக இருந்தது. அவர் 50 ரன்களைத் தாண்டியதும், அவர் பேட்டிங் செய்த வேகம்தான் எங்களுக்கு கூடுதலாக 20 ரன்களைக் கொடுத்தது.
கீழ் வரிசை வீரர்கள் இன்னும் கொஞ்சம் பங்களித்து, இன்னும் சில பவுண்டரிகளை அடித்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். பார்ட்னர்ஷிப் அமைத்து தொடர்ந்து வேகத்துடன் விளையாடுவதற்காகவே நான் 5-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று கம்பீர் பாயும் நானும் பேசினோம். கடந்தப் போட்டியில் அரை சதமடித்த நான் அதை செய்வதற்கான தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தேன். அம்முடிவை நாங்கள் 30 - 35வது ஓவரில் எடுத்தோம்” என்று கூறினார்.






