2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்

இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ராய்ப்பூர்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
மறுபுறம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.






