ஒரே நாளில் வீழ்ந்த 19 விக்கெட்டுகள்.. இதுவே நாளை கவுகாத்தியில் நடந்தால்..? அஸ்வின் விளாசல்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
சென்னை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர்.
முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ள இந்த பெர்த் ஆடுகளத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 19 விக்கெட்டுகள் (2 அணிகளிலும் சேர்த்து) வீழ்ந்துள்ளன. இருப்பினும் இதைப்பற்றி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் கருத்து கூறவில்லை.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் வகையில் மிகவும் மோசமான பிட்ச்சாக இருந்ததாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர். குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கொல்கத்தா பிட்ச் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
அந்த சூழலில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கவுகாத்தியில் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் பிட்ச்சுகளை விமர்சிக்கும் மைக்கேல் வாகன் போன்ற வெளிநாட்டு முன்னாள் வீரர்களை அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் விளாசியுள்ளார். குறிப்பாக ஆஷஸ் முதல் டெஸ்டில் ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்ததை குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று பெர்த்தில் வெறும் 19 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. ஆனால் அது கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான நாள். ஐயோ! நாளை கவுகாத்தியிலும் இதே மாதிரி நடந்தால் என்ன ஆகும்? இவை அனைத்தும் இரட்டை தரநிலையாகும்” என்று பதிவிட்டுள்ளார்.






