விரும்பி படித்தால் வெற்றி நிச்சயம்.. இன்று தேசிய கணித தினம்..!


இன்று தேசிய கணித தினம்
x
தினத்தந்தி 22 Dec 2024 11:49 AM IST (Updated: 22 Dec 2024 8:01 PM IST)
t-max-icont-min-icon

ஒரு மாணவர் கணிதத்தை பார்த்து எந்த அளவுக்கு பயப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவரது புரிந்துகொள்ளும் திறமை படிப்படியாக குறைந்து அவரது செயல்திறனும் குறையும்.

இந்தியாவின் கணித மேதை சீனிவாச ராமானுஜனை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

கணித பகுப்பாய்விலிருந்து முடிவிலா தொடர்கள் வரை ராமானுஜனின் படைப்புகள் பல நவீன கணிதக் கோட்பாடுகளுக்கு அடித்தளமாக உள்ளன. கணிதத்தில் முறையான கல்வி எதுவும் பயிலாத ராமானுஜன், இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கணித துறையில் வரலாற்று படைத்தார்.

கணிதக் கோட்பாடுகளை உருவாக்கத் தொடங்கிய சீனிவாச ராமானுஜன் 1911-ல் தனது முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் இருந்த காலத்தில், அவரது கண்டுபிடிப்புகளை பல ஆவணங்களில் வெளியிடுவதற்கு பிரிட்டிஷ் கணித மேதை ஹார்டி ஊக்குவித்தார். 1918 ஆம் ஆண்டில், ராயல் சொசைட்டியின் பெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை ராமானுஜன் பெற்றார்.

1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த ராமானுஜன், 1920-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி தன்னுடைய 32-வது வயதில் காலமானார். கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கணிதத்தில் ராமானுஜனின் அசாதாரண பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22-ம் தேதியை தேசிய கணித தினமாக அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது

இந்த நாளில் கணிதத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதில் கணிதத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த துறையாக இருந்தாலும் அதில் கணிதம் இடம்பெறும். ஒவ்வொரு துறையிலும் வெற்றிக்கான முக்கிய அங்கமாகவும் கணிதம் திகழ்கிறது.

ஆனால், மாணவ பருவத்தில் கணிதம் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. அது ரொம்ப கஷ்டம் என்று பல மாணவர்கள் ஆரம்பத்திலேயே ஒதுக்கிவிடுவது வழக்கம். சில மாணவர்களுக்கு கணித வகுப்பு வந்தாலே ஒருவித அழுத்தத்தில் இருப்பார்கள். வீட்டுப்பாடத்தை நினைத்து சில மாணவர்கள் பயப்படுவதுண்டு.

நமக்கு கணக்கு வராது என்ற பயமும் நம்பிக்கை குறைவும்தான் இதற்கு காரணம். ஒரு மாணவர் கணிதத்தை பார்த்து எந்த அளவுக்கு பயப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவரது புரிந்துகொள்ளும் திறமை படிப்படியாக குறைந்து அவரது செயல்திறனும் குறையும். இது கடைசியில் அவநம்பிக்கையான உணர்வில் முடிகிறது.

எனவே, கணித பாடத்தைப் பொருத்தவரை ஆர்வமும், முறையான பயிற்சியும் முதலில் அவசியம். ஒருமுறை சரியான விடை வரவில்லை என்றால், அதற்காக மனம் சோர்ந்து விடாமல் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறோம் என்பதை கண்டுபிடித்து, அதற்கான தீர்வை காண வேண்டும். அப்படி செய்தால் அந்த கணக்கு எளிதாகிவிடும். சில மாணவர்கள் எப்படியாவது பாஸ் ஆனால் போதும் என்று, சில முக்கிய பாடங்களை மனப்பாடம் செய்வார்கள். அப்படி செய்வதால் கணிதத் திறனில் முன்னேற்றம் அடைய முடியாது. மனப்பாடம் செய்வதறகு பதிலாக சில வாய்ப்பாடுகள், சூத்திரங்களை செயல்வடிவமாக செய்து பார்ப்பது பலன் அளிக்கும்.

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், அதில் கணிதத்தின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த கணித திறன் கொண்ட பணியாளர்கள்தான் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். எனவே, கணிதம் பற்றிய எதிர்மறையான புரிதலை கைவிட்டு, விரும்பி படித்தால் வெற்றி நிச்சயம்.


Next Story