டிரம்ப் வரி விதிப்பால் பல கோடிகளை இழந்த உலக பெரும் பணக்காரர்கள்- முதலிடத்தில் யார்?

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் அந்நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பலரும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், தங்கள் நாட்டு பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டினார். எனவே அந்த நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்தார். முன்னதாக தனது தேர்தல் பிரசாரத்தின்போது இதை வாக்குறுதியாகவே அவர் வழங்கி இருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடனே இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ஏப்ரல் 2-ந்தேதி புதிய வரி பட்டியலை வெளியிடுவேன் எனக்கூறி இருந்தார். இது உலக நாடுகளை கலக்கமடையச்செய்தன. இந்தியாவை ெபாறுத்தவரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 52 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனவே இந்திய பொருட்களுக்கும் அதே அளவிலான வரி விதிக்கப்பட்டால், ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவானது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் உலக நாடுகள் எதிர்பார்த்த பரஸ்பர வரி குறித்த விவரங்களை டிரம்ப் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி பட்டியலை அவர் வெளியிட்டார்.அதன்படி அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். அதைத்தவிர ஏராளமான நாடுகளுக்கு அதிக அளவிலான பரஸ்பர வரி விகிதங்களை வெளியிட்டார். அதில் இந்திய பொருட்களுக்கு 27 சதவீத வரி விதிப்பதாக கூறப்பட்டு இருந்தது.ஆனால் வெள்ளை மாளிகை பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவுக்கு 27 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.
டிரம்ப் வரி விதிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனுடன் உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பவர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆவர். இவருக்கு சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 993 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எலான் மஸ்க்கிற்கு 94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.