இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? ஈரான் வெளியிட்ட பதிவு

Image Courtesy : @IRIran_Military
போர் பதற்றம் தொடர்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஈரான் ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெஹ்ரான்,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அதனால் யாருக்கு லாபம் ஏற்படும்? யாருக்கு நஷ்டம் ஏற்படும்? என 'எக்ஸ்' வலைதளத்தில் ஈரான் ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பாகிஸ்தான்-இந்தியா போரால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்ன நடக்கும்?
வெற்றியாளர்கள்:
1- அமெரிக்கா
* இரு தரப்பினருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வார்கள் (பாகிஸ்தானின் ஆயுதங்களில் 40% அமெரிக்காவில் இருந்து வருகிறது)
* பாகிஸ்தானை நிலைகுலைய செய்வதன் மூலம் சீனாவை பலவீனப்படுத்துவார்கள்.
2- இஸ்ரேல்
* இந்தியாவிற்கு டிரோன் விற்பனை செய்வார்கள் (Hermes 900)
* காசா போர்க்குற்றங்களை திசை திருப்புவார்கள்.
* ஏவுகணை கூட்டு உற்பத்தியில் லாபம் கிடைக்கும் (Barak-8)
* பாதுகாப்பிற்காக இந்தியாவின் ஐ.நா. வாக்குகளைப் பயன்படுத்தும்.
* ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை (Arrow-3) இந்தியாவிற்கு விற்பனை செய்யும்.
3- பயங்கரவாத குழுக்கள்
* ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் காஷ்மீரில் ஆட்சேர்ப்பு நடத்தும்.
4- ஆயுத தொழில் துறை
* லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் பிறர் ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து லாபம் பெறுவார்கள்
தோல்வியடைபவர்கள்:
1. பொதுமக்கள்:
* நிரந்தரமாக பாதிக்கப்படுவார்கள்
* உயிரிழப்பவர்களில் 75% பேர் போராளிகள் அல்லாதவர்களாக இருப்பார்கள்.
* விநியோக சங்கிலி சரிவால் 140 மில்லியன் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள்.
* 20 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகள் ஆவார்கள்.
* காஷ்மீர் முகாம்கள் 4 மடங்காக நிரம்பி வழியும்.
2. தேசிய பொருளாதாரங்கள்:
* பாகிஸ்தான்: திவால்நிலைக்கு அருகில் செல்லும் (போருக்கு 77% வருவாய் செலவிடப்படும்)
* இந்தியா: 45% ரூபாய் சரிவு, $90 பில்லியன் தொழில்நுட்பத் துறை இழப்பு
3. சுற்றுச்சூழல் பேரழிவு
* யுரேனியம் விஷம் கலந்த நீர் (1999 போல்)
* காஷ்மீரின் 60% காடுகள் எரியும்
உண்மை நிலவரம்:
இந்தப் போரை ஆதரிக்கும் எந்த நாடும் அல்லது நடிகரும் இரு தரப்பினருக்கும் எதிரிதான். இந்தப் போர் மேற்கு நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு மட்டுமே உதவும். இது ஆயுத வியாபாரிகளை வளப்படுத்தவும், தெற்காசியாவை அழிக்கவும் உருவாக்கப்பட்ட நெருக்கடி ஆகும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.