ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருகிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல்–காசா இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இதற்காக அவர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து உரையாடியுள்ளார். ஓரிரு வாரங்களில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று கடந்த ஜூலையில் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், காசா மீது இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்துகொண்டே வருகின்றன. இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினருடன் போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“நாங்கள் தற்போது ஹமாஸ் அமைப்பினருடன் ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் விடுவிக்கப்பட்டால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்; தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும். ஹமாஸ் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவை நியாயமானவையே,” என்றார்.