பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்

மரியா மீது பயங்கரவாத குற்றச்சாட்டு இருப்பதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற நார்வே செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
கராகஸ்,
வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். இவர் அங்கு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி அங்குள்ள எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல் இந்த தேர்தல் முடிவை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக மரியாவால் ஆதரிக்கப்படும் எட்முண்டோ கோன்சலசை வெற்றியாளராக அமெரிக்கா அங்கீகரித்தது. பின்னர் நடைபெற்ற போராட்டம் காரணமாக அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறினார். ஆனால் மரியா வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் வெனிசுலாவிலேயே தலைமறைவாகி உள்ளார்.
இதனையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படுவதாக மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால் கரீபியன் கடற்பகுதியில் செல்லும் படகுகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. அமெரிக்க ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு மரியாவும் ஆதரவு தெரிவித்தார். இதனால் வெறுப்பை தூண்டுதல், பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
இதற்கிடையே ஜனநாயகத்தை மீட்க போராடுவதற்காக மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 10-ந் தேதி நார்வேயில் இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மதுரோ ஆட்சியில் இருந்து தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என கருதும் அவர் அந்த பரிசை பெறுவதற்காக நார்வே செல்ல திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் பயங்கரவாத குற்றச்சாட்டு காரணமாக தலைமறைவாகி உள்ள அவர் நோபல் பரிசு பெற நார்வே சென்றால் நாட்டை விட்டு தப்பியோடியவராகவே கருதப்படுவார் என அட்டார்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் அறிவித்துள்ளார். இதனால் அமைதிக்கான நோபல் பரிசு பெற நார்வே செல்வதில் மரியாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.






