ரஷிய அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; மண்டல, உலகளாவிய விசயங்கள் பற்றி ஆலோசனை

இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றி ரஷிய அதிபரிடம் மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
மாஸ்கோ,
ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஓ.) கலந்து கொள்வதற்காக மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரி ஜெய்சங்கர் சென்றார். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடந்தது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு அதிபர் புதினை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் மண்டல மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கான பார்வைகளை பகிர்ந்து கொண்டனர்.
இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொண்டேன். இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினேன். மண்டல மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம். இரு நாடுகளின் உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அவருடைய பார்வைகளை மற்றும் வழிகாட்டுதல்களை ஆழ்ந்து மதிக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.






