உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் ராஜினாமா

உக்ரைனின் பொருளாதார மந்திரி யூலியா ஸ்வைரைடென்கோவை, புதிய பிரதமராக அறிவித்து ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.
போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார் இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார்.
எனினும் போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அரசில் பெரிய அளவில் நேற்று மாற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியும் அறிவிக்கப்பட்டனர். உக்ரைன் பிரதமராக டெனிஸ் ஷிம்ஹால் பதவி வகித்து வந்த நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
பொருளாதார மந்திரி யூலியா ஸ்வைரைடென்கோவை, டெனிஸ் ஷிம்ஹாலுக்கு பதிலாக புதிய பிரதமராக ஜெலன்ஸ்கி அறிவித்து உத்தரவு வெளியிட்டார். இதனால், யூலியா பிரதமர் பொறுப்புடன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தலைமையேற்று நடத்தி செல்வார்.
இந்த சூழலில், உக்ரைன் பிரதமர் பதவியை டெனிஸ் ஷிம்ஹால் ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதம் ஒன்றை அரசுக்கு அவர் இன்று அனுப்பி வைத்துள்ளார்.