புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்... வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா

ரஷியாவின் குற்றச்சாட்டை உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் மறுத்து உள்ளது.
மாஸ்கோ,
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடங்கிய போரானது 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரால் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். எனினும், போர்நிறுத்தத்திற்கான உடன்படிக்கை எட்டப்படாத சூழல் உள்ளது. இதனால், போர் நீடிக்கிறது.
இந்நிலையில், நவ்கரோட் பகுதியில் அமைந்துள்ள ரஷிய அதிபர் புதினின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது என ரஷியா திடீரென குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் ரஷியா வெளியிட்டு உள்ளது.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அந்த வீடியோ பதிவில், ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது என்று தெரிவித்து உள்ளது. வீடியோவில், 6 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சுமந்தபடி வந்த சக்லன்-வி என்ற அந்த ஆளில்லா விமானத்தின் பாகங்கள் சிதறி கிடக்கின்றன.
அதன் அருகே ரஷிய ராணுவ உடையணிந்த வீரர் ஒருவரும் நிற்கிறார். எனினும், உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் இதனை மறுத்து உள்ளது.
ரஷிய வெளியுறவு துறை மந்திரி லாவ்ரவ், நவ்கரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள புதினின் வீடு மீது 20-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்தது என இந்த வார தொடக்கத்தில் குற்றச்சாட்டாக கூறினார். இந்த சூழலில், வீடியோவை வெளியிட்டு, புதின் வீடு மீது நடந்த ஆளில்லா விமானம் தாக்குதலை ரஷியா உறுதிப்படுத்தி உள்ளது.






