டிரம்ப் அடுத்த மாதம் தென்கொரியா பயணம்; ஜின்பிங்கிடம் பேச திட்டம்

டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை சீனாவுக்கு வரும்படி கடந்த மாதம், தொலைபேசி வழியே ஜின்பிங் விடுத்த அழைப்பை டிரம்பும் ஏற்று கொண்டார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வருகிற அக்டோபரில் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் முக்கிய ஆலோசகர்களும் செல்ல உள்ளனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இதில், வர்த்தக மந்திரிகளுடனான சந்திப்பும் நடைபெறும்.
இந்த உச்சி மாநாடு ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக்கம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஜீ ஜின்பிங்குடன் இருதரப்பு கூட்டம் நடத்துவதற்காக, தீவிர ஆலோசனைகளையும் அவர் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
ஜின்பிங்கை சந்திப்பது டிரம்புக்கு முக்கியதொரு வாய்ப்பாக அமையும் என பார்க்கப்படுகிறது. எனினும், இந்த சந்திப்பிற்கான உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை.
டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை சீனாவுக்கு வரும்படி கடந்த மாதம், தொலைபேசி வழியே ஜின்பிங் விடுத்த அழைப்பை டிரம்பும் ஏற்று கொண்டார். எனினும், அதற்கான தேதி எதுவும் முடிவாகவில்லை.
இந்நிலையில், டிரம்பின் தென்கொரிய பயணத்தில் இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோன்று, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.