சீனாவில் பராமரிப்பு பணியாளர்கள் மீது ரெயில் மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு

2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பீஜிங்,
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குன்மிங் நகரத்தில், இன்று அதிகாலை ரெயில் தண்டவாளத்தில் பணியாளர்கள் சிலர், தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழித்தடத்தில் வந்த சோதனை ரெயில் ஒன்று பராமரிப்பு பணியாளர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் உள்ள லுயோயாங்ஜென் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக சீன ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, விபத்து ஏற்பட்ட வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக சீன ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






