பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம்


பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 25 Nov 2025 8:25 AM IST (Updated: 25 Nov 2025 8:26 AM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு பயங்கரவாதிகள் அந்த ராணுவத்தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் எல்லை பிரச்சினை, கொள்கை வேறுபாடு ஆகியவை காரணமாக மோதல் நீடித்து வருகிறது. இதில் பாகிஸ்தானில் அகதிகளாக இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தான் ஆதரவு பாகிஸ்தான் தெரிக் இ தலீபான் பயங்கரவாதிகள் எல்லையில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் ஏவுகணை வீசி போர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. துருக்கியில் இருநாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஓரிரு மாதங்களில் இருநாடுகளிடையே மனக்கசப்பு உண்டாகி அமைதி ஒப்பந்தம் காலாவதியானது. இதனால் மீண்டும் இருநாடுகளிடையே புகைச்சல் எழ தொடங்கியது. இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை சுற்றிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு பயங்கரவாதிகள் இந்த ராணுவத்தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 3 பேர் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டு உடல் சிதறி செத்தனர். இதில் 3 ராணுவ அதிகாரிகள் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தெரீக் இ தலீபான் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தனித்தனி அறிக்கைகளில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது பதிவில், “வெளிநாட்டு ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல். பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கை ஒரு பெரிய துயரத்தைத் தடுத்துள்ளது. பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டைத் தாக்கும் பயங்கரவாதிகளின் தீய நோக்கங்களை நாங்கள் முறியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது பதிவில், “இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story