இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து

இருநாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கும் இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
மாஸ்கோ,
இந்தியா-ரஷியா இடையேயான ராணுவ ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தானது. இதற்கான சட்டம் ஒன்று ரஷிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தளவாட ஆதரவின் பரஸ்பர பரிமாற்ற ஒப்பந்தம் எனப்படும் இந்த சட்டத்துக்கு கீழவை கடந்த 2-ந்தேதியும், மேலவை 8-ந்தேதியும் ஒப்புதல் வழங்கியது.
பின்னர் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 'Reciprocal Exchange of Logistics Support' என்ற ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் நேற்று கையெழுத்து போட்டார். ரஷியா தனது ராணுவ வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். இதைப்போல இந்தியாவும் ரஷியாவுக்கு வழங்கும்.
குறிப்பாக கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் பிற பணிகளில் இவை பயன்படுத்தப்படும் என ரஷிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்தியாவின் படைகள் ரஷியா செல்வதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இருநாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கும் இது வழிவகுக்கும் என கூறியுள்ளன.






