உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர் படுகாயம்


உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர் படுகாயம்
x

கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷிய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

கீவ்,

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் சுமார் 1,400 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் முன்மொழிந்த 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை, நீண்ட இழுபறிக்குப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம். உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திக்க உள்ளேன். புத்தாண்டுக்கு முன் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

டிரம்ப், ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், உக்ரைன் மீது ரஷியா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷிய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 16 வயது சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

1 More update

Next Story