பஹல்காம் தாக்குதலில் நடுநிலையான விசாரணைக்கு தயார்; பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாரக உள்ளது. அதேவேளை, இந்தியாவின் எந்தவிதமான மோதல்போக்கையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது' என்றார்.