நைஜீரியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து மாணவிகள் தப்பியோட்டம்

பயங்கரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை உயிரோடு மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
அபுஜா,
நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் மாணவிகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று உள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த பள்ளிக்குள் பயங்கரவாதிகள் கும்பல் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கு தங்கியிருந்த 25 மாணவிகளை துப்பாக்கிமுனையில் கடத்தி கொண்டு சென்றனர். இதனை தடுக்க முயன்ற விடுதி வார்டன் மற்றும் காவலாளியை சுட்டு கொன்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அந்த நாட்டின் அரசாங்கம் ராணுவத்தினரை களம் இறக்கி உள்ளனர். பயங்கரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை உயிரோடு மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து 2 மாணவிகள் தப்பி போலீசாரிடம் தஞ்சம் அடைந்தனர். அதில் ஒரு மாணவி பலத்த காயம் அடைந்துள்ளநிலையில் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தநிலையில் தப்பி வந்த மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி கடத்தப்பட்ட மாணவிகள் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறார்கள்.






