மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்.!

மிஸ் யுனிவர்ஸ் அலகி பட்டம் வென்றுள்ள பாத்திமா போஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டிருந்தார்.
பாங்காக்,
மிஸ் யுனிவர்ஸ் போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான 74-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி, தாய்லந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் மணிக விஸ்வகர்மா போட்டியிட்டார்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தார். இவர் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு வாழ்த்துகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மனிகா விஸ்வகர்மாவால், முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை.
தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள பாத்திமா போஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டார். போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில், பாத்திமா போஷை முட்டாள் என்று கூறினார். விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்காக அவர் இவ்வாறு பேசியதாக கூறப்பட்டது. இதனால் பாத்திமா போஷ், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதாக மற்ற அழகிகளும் கோபம் அடைந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாத்திமா போஷ் கூறுகையில்,' நவத் செய்தது மரியாதையான செயல் அல்ல, அவர் என்னை முட்டாள் என அழைத்தார். உலகம் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன்' என தெரிவித்தார். பாத்திமாவின் இந்த தைரியமாக பேட்டியை மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பா பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.






