ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: உயரும் பலி எண்ணிக்கை - 279 பேர் மாயம்


ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: உயரும் பலி எண்ணிக்கை - 279 பேர் மாயம்
x

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர்.

பீஜிங்,

சீனாவின் தன்னாட்சி பிராந்தியங்களுள் ஒன்று ஹாங்காங். அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 8 தொகுதி கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதற்காக மூங்கில்களை கொண்டு அதனை சுற்றிலும் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஏறி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. அடுத்த 40 நிமிடங்களில் அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் இந்த தீ பரவியது. இதில் 5 உயர்ந்த கட்டிடங்கள் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. மேலும் தீப்பிழம்பு தூண்கள் போல அந்த இடமே பயங்கரமாக காட்சியளித்தது. எனவே தாய் போ நகர சாலை உடனடியாக மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் அண்டை மாகாணங்களில் இருந்தும் பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதனையடுத்து பல மணி நேரம் போராடி தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 700 பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த கோர தீ விபத்தில் சிக்கி இதுவரை 44 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர் என்றும் 29 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. எனினும் தீ வேகமாக பரவ அதனை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள மூங்கில் சாரமே காரணம் என தெரிய வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஹாங்காங்கில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story