ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கனிமொழி குழு இன்று சந்திப்பு

திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர்.
மாஸ்கோ,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர் ஜப்பான் புறப்பட்டு சென்றனர். சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினர் ஐக்கிய அமீரகத்துக்கு சென்றனர். இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றனர்.
இந்த குழுவினர் சுலோவேக்கியா, கிரீஸ், லட்வியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அந்த நாட்டு தலைவர்களிடம் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷிய மந்திரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை குழு எடுத்துரைக்கிறது. நாளை (சனிக்கிழமை), ஸ்லோவேனியாவுக்குச் செல்வதற்கு முன்பு, இந்த குழுவினர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.