புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி... ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

புயலால் பாதித்த இலங்கைக்கு மத்திய அரசு ரூ.4,034.34 கோடி நிவாரண உதவியை அறிவித்து உள்ளது.
கொழும்பு,
இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயலில் சிக்கி 640 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், முன்வந்த அண்டை நாடான இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட பல டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இலங்கை நாட்டுக்கு, பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
புயலால் பாதித்த இலங்கைக்கு மத்திய அரசு ரூ.4,034.34 கோடி நிவாரண உதவியை அறிவித்து உள்ளது என கூறினார். அவர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை தலைநகர் கொழும்புவில் இன்று சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் இந்த சந்திப்பு பற்றி நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், டிட்வா சூறாவளி புயல் தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் இலங்கையின் மறுகட்டமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் உறுதியான ஈடுபாடு பற்றி அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா வழங்க கூடிய நிவாரண உதவியானது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று கூறினார். 2022-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மீண்டு வரும் சூழலில் புயலால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.






