கனடாவில் இந்திய வம்சாவளி இளம்பெண்ணை படுகொலை செய்த காதலன் - அதிர்ச்சி சம்பவம்

காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒட்டாவா,
கனடாவின் டொரோண்டோ மாகாணம் மேற்கு வெல்லிங்டன் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹிமன்ஷி ஹரனா (வயது 30). இந்திய வம்சாவளி பெண்ணான இவரும் அப்துல் ஹபாரி (வயது 32) என்ற நபரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹிமன்ஷிக்கும் காதலன் அப்துலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹிமன்ஷியை கொலை செய்த அப்துல் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனிடையே, ஹிமன்ஷி மாயமானதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹிமன்ஷியை தேடியுள்ளனர். அப்போது மறுநாள் காலை வீட்டில் சடலமாக கிடந்த ஹிமன்ஷியை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து ஹிமன்ஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துலை தீவிரமாக தேடி வருகின்றனர்.






