வெள்ள பாதிப்பு: நிவாரணப்பொருட்களுடன் இலங்கைக்கு சென்றது ஐ.என்.எஸ் சுகன்யா கப்பல்

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவி செய்வதற்காக, நிவாரணப்பொருட்களுடன் இந்திய கடற்கடை கப்பல் திரிகோணமலை துறைமுகம் சென்றது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ‘தித்வா’ புயல் காரணமாகவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் அடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிருடன் புதையுண்டனர். எனவே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இதில் பலர் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை தற்போது 330 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 1½ லட்சம் பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
எனவே வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பித்து அதிபர் அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ளார். இதனால் வெள்ள மீட்பு பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே வெள்ள மீட்பு பணிக்கு உதவ இலங்கைக்கு இந்தியாவும் ஆதரவுக்கரம் நீட்டியது. அதன்படி இலங்கைக்கு உணவு, மருந்து, போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.
'ஆப்பரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் வாயிலாக, விமானப் படைக்கு சொந்தமான இரு விமானங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் மற்றும் 21 டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. மேலும் ஒரு விமானத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது நிவாரணப்பொருட்களுடன் இந்திய கடற்கடை கப்பல் ஐ.என்.எஸ்., சுகன்யா, திரிகோணமலை துறைமுகத்துக்கு சென்றுள்ளது. இது தவிர, கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் இருந்து இரு ஹெலிகாப்டர்கள், அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.






