இந்தியா - தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்து

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
பாங்காக்,
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகள் சேர்ந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பை உருவாக்கிஉள்ளது.ஆண்டுதோறும் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து மாநாடு நடத்தி ஆலோசனை நடத்தப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, சுற்றுலா, விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
பாங்காக் விமான நிலையத்தில் அவருக்கு தாய்லாந்து இந்திய சமூகத்தினர் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்து அரசு மாளிகையில் இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்கும் இருதரப்பு சந்திப்பு நடைபெறும். அங்கு பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது. இருதரப்பு சந்திப்புக்கு பிறகு தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா - பிரதமர் மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதையடுத்து, தாய்லாந்து அரசு சார்பில் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி, வங்காளதேச இடைக்கால தலைவர் முகம்மது யூனுஸ் அருகருகே அமர்ந்து இருந்தனர். சமீப காலமாக இந்தியா -வங்காளதேசம் இடையேயான உறவில் கசப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், இரு தலைவர்களும் அருகருகே அமர்ந்து இருந்தது கவனம் பெற்றது.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொள்கிறார். அப்போது கூட்டமைப்பால் 2030-ம் ஆண்டு பாங்காக் லட்சியப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோரர் மற்றும் அவரது மனைவியையும் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். இதற்கிடையே பிரதமர் மோடியும் தாய்லாந்து பிரதமர் ஷின வத்ராவும் அந்நாட்டின் 6 சிறந்த கோவில்களில் ஒன்றான வாட் போவுக்குச் செல்ல உள்ளனர். இவ்வாறு தாய்லாந்தில் 2 நாள் அலுவல்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி (வெள்ளிக்கிழமை) இரவு மீண்டும் டெல்லி திரும்புகிறார்.