இந்தியா-ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

6 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சென்றது மறக்க முடியாதது என்று ஜப்பான் பிரதமர் பேசினார்.
டோக்கியோ,
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது.
விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்திய வாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். டோக்கியோ விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதை கண்டு களித்த பிறகு பிரதமர் மோடி தனது 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதையடுத்து ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா - ஜப்பான் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செய்ய வேண்டிய ஒப்பந்தங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து பேசப்பட்டது.
ஜப்பான் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜப்பான் பிரதமர் பேசுகையில், “இந்தியாவின் வரலாற்றை பார்த்து நான் பிரமித்து போனேன், 6 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சென்றது மறக்க முடியாதது. இந்தியாவுடனான விண்வெளி ஒத்துழைப்பை ஆதரிப்போம்" என்றார்.
பிரதமர் மோடி பேசுகையில், “புல்லட் ரயில் திட்டம் - ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம், ஏஐ, செமிகண்டக்டர், கனிமவள துறைகளில் இணைந்து செயல்பட முடிவு, அமைதி வளம் வளர்ச்சிக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படும்" என்று கூறினார்.
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி, நாளை சீனாவின் தியான்ஜின் நகருக்கு செல்கிறார். அங்கு வரும் 31 ஆம் தேதி மற்றும் செப்.1 ஆம் தேதிகள் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.