மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்: டிரம்ப்

இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால், இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தநிலையில்,சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி சிரித்துப் பேசி கலந்துரையாடினார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது,
நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளன.இது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன்.என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவையும் ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதங்கம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது