ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடை - ஜி7 கூட்டமைப்பு எச்சரிக்கை

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 184வது நாளாக நீடித்து வருகிறது.
ஒட்டாவா,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 184வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் - ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15ம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஜி-7 கூட்டமைப்பு நாடுகளின் நிதி மந்திரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாநாடு கனடாவின் அல்பெர்டா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜி7 கூட்டமைப்ப்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.