ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் தேவை என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
ஜோகன்னஸ்பர்க்,
ஜி20 உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, போதைப்பொருள்-பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பரிந்துரைகளை வழங்கினார்.
நேற்று நடந்த இந்த மாநாட்டின் 3-வது அமர்விலும் பிரதமர் மோடி பேசினார். ‘அனைவருக்கும் நியாயமான மற்றும் சமமான எதிர்காலம் - முக்கியமான கனிமங்கள்; ஒழுக்கமான வேலை; செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் நடந்த அந்த அமர்வில் பேசும்போது அவர் கூறியதாவது:-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உலகளாவிய நன்மைக்கு பயன்படுத்துவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
இதற்காக பயனுள்ள மேற்பார்வை, பாதுகாப்பான வடிவமைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் டீப்பேக்குகள், குற்றம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய ஒப்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்.
மனித வாழ்வு, பாதுகாப்பு அல்லது பொது நம்பிக்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் நிச்சயம் பொறுப்புடமை மற்றும் தணிக்கைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மேலும் மிக முக்கியமாக, செயற்கை நுண்ணிறவு மனித திறமைகளை மேம்படுத்த வேண்டும். ஆனால் முடிவெடுப்பதற்கான இறுதிப் பொறுப்பு எப்போதும் மனிதர்களிடமே இருக்க வேண்டும்.
முக்கியமான தொழில்நுட்பங்கள் நிச்சயம் மனிதர்களை மையமாகக்கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக நிதி சார்ந்ததாக இருக்கக்கூடாது. இதைப்போல தேசியத்தை சார்ந்ததாக இல்லாமல் சர்வதேசத்தை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
இந்த பார்வை இந்தியாவின் தொழில்நுட்ப சூழலியலில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மேலும் இது விண்வெளி பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு அல்லது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என எந்தத் துறையிலும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அது உலகத் தலைவராக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு (இப்சா) தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் நெருக்கமான ஒத்துழைப்புடன் முன்னோக்கிச்செல்ல வேண்டும். உலகம் துண்டு துண்டாகவும் பிளவுபட்டதாகவும் தோன்றும் ஒரு காலகட்டத்தில், ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் மனிதநேயத்தின் செய்தியை இப்சா வழங்க முடியும்’ என்று கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தம் இனியும் ஒரு விருப்பமாக இருக்காது என்றும் அது ஒரு தேவையாகவே இருக்கிறது என்றும் கூறிய பிரதமர் மோடி, இதற்காக இப்சா அமைப்பு உலகளாவிய நிர்வாக நிறுவனங்களில் மாற்றங்களுக்கான தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த 3 நாட்டு மன்றத்தில் பிரேசில் அதிபர் லூயிஸ் லூலா டாசில்வா, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே ஜி20 உச்சி மாநாட்டை நடத்திய தென் ஆப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசாவை பிரதமர் மோடி தனியாகவும் சந்தித்து பேசினார்.






