முதன்முறையாக... நீருக்குள் வைத்த பொறியில் சிக்கிய நண்டை லாவகத்துடன் இரையாக்கிய ஓநாய்; வைரலான வீடியோ

நியூயார்க் கல்லூரியின் உதவி பேராசிரியர் கைலே ஆர்டெல்லே தலைமையிலான ஆய்வாளர்கள் கேமராக்களை அமைத்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டொரண்டோ,
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்த கடற்கரை பகுதிகளில் ஐரோப்பிய பச்சை நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அதனால், நண்டுகளை கட்டுப்படுத்த அந்த பகுதி மக்கள் சிலர் பொறிகளை அமைத்து, அவற்றை பிடித்து, அழிக்க முடிவு செய்தனர்.
ஆனால், அந்த பொறிகள் அடிக்கடி சேதமடைந்து காணப்பட்டன. எதனால் இப்படி ஆகிறது? என அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது கரடி அல்லது ஓநாயின் வேலையாக இருக்கும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், நீரின் உள்ளே அவற்றால் மூழ்கி செல்ல முடியாது.
அதனால், அந்த பொறிகளை சேதமடைய செய்தது என்னவாக இருக்கும்? என்பது தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து அவற்றை கண்டறிய முடிவானது. இதற்காக, நியூயார்க் கல்லூரியின் உதவி பேராசிரியர் கைலே ஆர்டெல்லே தலைமையிலான ஆய்வாளர்கள் கேமராக்களை அமைத்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அது சீல் அல்லது நீர் நாயாக இருக்க கூடும் என அவர்கள் நினைத்தனர். ஆனால், கேமராவில் ஓநாய் இருப்பது தெரிந்தது. முதன்முறையாக, மனிதர்கள் அமைத்த பொறியில் சிக்கிய நண்டை, ஓநாய் ஒன்று தன்னுடைய இரையாக மாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
அது, பொறியுடன் இணைந்திருந்த மிதவையை நீருக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து மணலில் போட்டது. அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த கயிற்றையும் இழுத்தது. இதன் பின்னர், நீரில் இருந்த பொறியை வெளியே கொண்டு வந்து, அதில் சிக்கியிருந்த நண்டை கவ்வி சென்றது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. எனினும், பொறி இருக்கிறது என்பதும், அதில் நண்டு உள்ளது என்றும் ஓநாய்களுக்கு எப்படி தெரிய வந்தது? என ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது. அதனை நீருக்குள் இருந்து எப்படி வெளியே இழுத்து கொண்டு வர வேண்டும்? என ஓநாய்களுக்கு தெரிந்திருப்பதும் அவர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளது. இதற்கான பதிலுக்காக ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது.






