விண்வெளிக்குச் சென்ற முதல் மாற்றுத்திறனாளி பெண்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பணிபுரியும் இவர் புளு ஆர்ஜின் ராக்கெட்டில் பயணித்து திரும்பி உள்ளார்.
லண்டன்,
ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர்.இந்தநிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இந்த பயணத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார்.
நேற்று விண்வெளிக்கு புறப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில், ஜேர்மனியை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) பொறியாளரான மைக்கேலா பென்தாஸ்(Michaela Benthaus), பயணம் செய்தார்.
தற்போது 33 வயதான மைக்கேலா பென்தாஸ், அவரது 26 வயதில் இருசக்கர வாகன மோட்டர் விபத்து ஒன்றில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு, தற்போது வரை சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார். நேற்றைய பயணத்தில், ப்ளூ ஆரிஜின் விண்கலம் சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தை தாண்டி, கார்மன் கோடு என்று அழைக்கப்படும் விண்வெளியின் எல்லைக்கு சற்று மேலே சென்றது. பயணத்தின் ஒரு பகுதியாக பயணிகள் சிறிது நேரம் எடையற்ற தன்மையை அனுபவித்தனர்.
இதன் மூலம், விண்வெளிக்கு சென்ற முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையை மைக்கேலா பென்தாஸ் பெற்றுள்ளார். பூமிக்கு வந்த பின்னர் இது குறித்து பேசிய மைக்கேலா பென்தாஸ், இது மிகவும் அருமையான அனுபவம். எனக்கு அந்தக் காட்சியும், நுண்-ஈர்ப்பு விசையும் மட்டும் பிடிக்கவில்லை. மேலே செல்வதும் எனக்குப் பிடித்திருந்தது. மேலே செல்லும் ஒவ்வொரு கட்டமும் மிகவும் அருமையாக இருந்தது என கூறியுள்ளார்.






