சிந்து நதியில் ரத்தம் ஓடும்: பாகிஸ்தான் முன்னாள் மந்திரி சர்ச்சை பேச்சு

சிந்து நதி பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று பிலாவல் பூட்டோ ஆணவத்துடன் பேசியுள்ளார்.
இஸ்லமபாத்,
பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எப் என்ற இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது.
தடை செய்யப்பட இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் அம்பலாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களிடம் ரத்தம் ஒடும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பிலாவல் பூட்டோ இது தொடர்பாக கூறியதாவது :- இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சிந்து நதி பாகிஸ்தானுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும். நமது தண்ணீர் அந்த நதியில் ஓடும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது" என்று கூறியுள்ளார்.