நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஈரான் மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா

ஈரான் அரசின் சமீபத்திய பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள் திறந்த விகித நாணயச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தின
தெஹ்ரான்,
மத்திய கிழக்கு நாடான ஈரான், நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு சரிவு மற்றும் அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணயமான (ரியால்) மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து, சுமார் 13,90,000 ஆக புதிய சாதனை அளவிற்கு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஈரானில் வணிகர்கள், வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் தெஹ்ரானிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக சென்றனர். கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன.போராட்டத்தைத் தொடர்ந்து, ஈரானின் மத்திய வங்கி கவர்னர் முகமது ரெசா பார்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் பதவி விலகினார். அவரது ராஜினாமாவை ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஏற்றுக்கொண்டார்.அவருக்குப் பதிலாக முன்னாள் நிதி அமைச்சர் அப்தோல் நாசர் ஹெம்மாட்டி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார் என்று ஈரான் அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் சமீபத்திய பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள் திறந்த விகித நாணயச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தின. அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியையும் வெளிநாட்டு நாணயத்திற்கான அணுகலையும் கடுமையாக கட்டுப்படுத்தின. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.






