பாகிஸ்தானுடன் மோதல்: சண்டையை நிறுத்த மோடியிடம் பேசினேன்- டிரம்ப் புதிய தகவல்


பாகிஸ்தானுடன் மோதல்: சண்டையை நிறுத்த  மோடியிடம் பேசினேன்-  டிரம்ப் புதிய தகவல்
x

இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார்.

வாஷிங்டன்,

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று தெரிவித்தது.

ஆனால் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். மேலும் போரில் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். நான் மிகவும் அற்புதமான மனிதரான மோடியிடம் பேசினேன். அவரிடம் ‘உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன். தொடர்ந்து பாகிஸ்தானிடம் ‘உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன். இரு நாடுகள் இடையே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் பிரச்சினை இருந்து வருகிறது.

இரு நாடுகளிடமும் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? தொடர்ந்து சண்டையிட்டால், நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை என்று கூறினேன். அல்லது தலைசுற்றும் அளவுக்கு உங்கள் மீது அதிக வரி விதிக்கப் போகிறோம் என்று கூறினேன். நீங்கள் இருவரும் ஒரு அணு ஆயுதப் போருக்குக் காரணமாக இருக்கப் போகிறீர்கள் என்று கூறி, ‘நாளை என்னை மீண்டும் அழைக்கவும்’ என்று கூறினேன். ஆனால் அடுத்த 5 மணிநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது.

ஒருவேளை இரு நாடுகள் இடையே மீண்டும் சண்டை தொடங்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தால் நான் அதையும் நிறுத்துவேன். போர் நடக்க நாம் அனுமதிக்க முடியாது.போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களாக இருக்கலாம். ஆனால் உண்மையான எண்ணிக்கையை அவர்கள் வெளியிடவில்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

1 More update

Next Story