சிரித்தபடியே டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர்.
கலிபோர்னியா,
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளை முடித்துக் கொண்டு சுபான்ஷு சுக்லா அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேரும் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்தார். தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து டிராகன் விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்பட்டனர். முதல் வீரராக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். 2-வது வீரராக இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அழைத்து வரப்பட்டார். அப்போது புன்னகைத்தவாறே, கைகளை அசைத்த படி சுபான்ஷு தரையில் கால்பதித்தார். 3-வது வீரராக ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, 4-வது வீரராக போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி அழைத்து வரப்பட்டனர்.
சிறிய படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்படும் அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடக்க உள்ளன. சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று பத்திரமாக திரும்பிய முதல் இந்தியராக சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார். முன்னதாக சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர். டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை அவரது பெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.