கேமரூன் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்


கேமரூன் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2025 9:30 PM IST (Updated: 24 Nov 2025 9:31 PM IST)
t-max-icont-min-icon

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன்.

யவுங்டி,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் அதிபராக பவுல் பியா செயல்பட்டு வருகிறார். இவர் 1975 முதல் 1982 வரை கேமரூன் பிரதமராக செயல்பட்டார். பின்னர் 1982ம் ஆண்டு முதல் 43 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, கேமரூன் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பவுல் பியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா பெக்ரி போட்டியிட்டார். தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பெற்று பவுல் பியா மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா 35 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 92வது வயதில் பவுல் பியா 8வது முறையாக கேமரூன் அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா நாட்டை விட்டு தப்பியோடினார். அவர் அண்டை நாடான காம்பியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அதிபர் தேர்தலில் பவுல் பியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் கேமரூனில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமாதான் காரணம் என அதிபர் பவுல் பியா குற்றஞ்சாட்டினார். மேலும், அவர் தேச துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா அண்டை நாடான காம்பியாவில் தஞ்சமடைந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இசா ஷிரோமாவுக்கு பாதுகாப்பு அளிப்பதாக காம்பியா அரசு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story