வங்காளதேசம், பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை வரும் 29ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

டாக்காவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் விமானம் கராச்சியை இரவு 11 மணிக்கு சென்றடைகிறது.
டாக்கா,
வங்காளதேசத்தில் 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறது
இதனிடையே, ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது வங்காளதேசம் , பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை செயல்படவில்லை.
இந்நிலையில், வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு அமைந்த உடன் பாகிஸ்தானுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான இக்ஷா டார் கடந்த ஆகஸ்டு மாதம் வங்காளதேசம் வந்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, 13 ஆண்டுகளுக்குப்பின் வங்காளதேசம், பாகிஸ்தான் இடையே வரும் 29ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாரம் இரு முறை இந்த விமான சேவை இயக்கப்பட உள்ளது. அதன்படி, வியாழக்கிழமை, சனிக்கிழமை விமானம் இயக்கப்பட உள்ளது. டாக்காவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் விமானம் கராச்சியை இரவு 11 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல், இரவு 12 மணிக்கு கராச்சியில் இருந்து புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு டாக்கா சென்றடைகிறது.
வங்காளதேசம், பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான சேவையின்போது விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதா? அல்லது மாற்று பாதையில் விமானங்கள் செல்ல உள்ளனவா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.






