“நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ..!” - பொதுமக்களை காப்பாறிய நபரை பாராட்டிய அந்நாட்டு பிரதமர்


“நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ..!” - பொதுமக்களை காப்பாறிய நபரை பாராட்டிய அந்நாட்டு பிரதமர்
x

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 15 பேரை கொன்றது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கான்பெரா,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த கடற்கரை அருகே யூதர்களின் பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதனை பார்த்ததும் உயிர் பயத்தில் மக்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே அலி அகமது (வயது 43) என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியை அவர் பிடுங்கினார், அப்போது மற்றொரு நபர் சுட்டதில் அலி அகமதுவுக்கு படுகாயம் ஏற்பட்டது. முன்னதாக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த சஜித் அக்ரம் (50), நவீத் அக்ரம் (24) என்பதும், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இருவரும் தந்தை, மகன் என்பதும் தெரிய வந்தது. எனினும் அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா நகரில் கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் பலியாகினர். இதனையடுத்து அங்கு துப்பாக்கி வைத்திருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார். ஏனெனில் துப்பாக்கிச்சூட்டில் பலியான சஜித் மட்டுமே 6 துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அகமது மட்டும் துப்பாக்கியை பிடுங்கவில்லை என்றால் மேலும் பல உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். எனவே துணிச்சலை பாராட்டி மக்கள் அவரை ஹீரோ என பட்டம் கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில் சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துணிச்சலாக துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நலம் விசாரித்தார்.

மேலும், மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆபத்தில் ஆழ்த்திக்கொண்ட உங்களுக்கு, ஒவ்வொரு ஆஸ்திரேலியர் சார்பாகவும் நன்றி கூறுவதாகவும், நீங்கள் தான் ஆஸ்திரேலியாவின் ஹீரோ என்றும் அவரிடம் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.


1 More update

Next Story