ஆஸ்திரேலியா: துப்பாக்கி சூட்டில் 16 உயிரை பறித்த தந்தை -மகன் : திடுக் தகவல்கள்

துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்த நவீத் அக்ரம் குணமடைந்த பிறகு, அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி, போண்டி கடற்கரைக்கு நேற்று சுமார் 1,000 யூதர்கள் வந்திருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று கடற்கரையில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.துப்பாக்கி சூடு சம்பவத்தைப் பார்த்து பீதியடைந்த பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடினர்.
இந்த தாக்குதலில் முதல் கட்டமாக 11 பேர் பலியாகினர். 2 போலீசார் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள்மீது பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு வாலிபரை பொதுமக்களில் ஒருவர் தாக்கி கீழே தள்ளி துப்பாக்கியை பறித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தந்தை–மகன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தந்தையின் பெயர் சஜித் அக்ரம் (வயது 50), மகன் பெயர் நவீத் அக்ரம் (24) ஆகும்.ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் கமிஷனர் லேன்யன் கூறியதாவது:–துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை–மகன் இருவருக்கும் ஆஸ்திரேலியாவுடன் நீண்ட காலமாக தொடர்பு உள்ளது. சஜித் அக்ரம் 2015-ம் ஆண்டு முதல் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் இருவரின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சஜித் அக்ரம் ஒரு துப்பாக்கி கிளப்பில் உறுப்பினராக இருந்தார். சட்டப்படி துப்பாக்கி உரிமம் பெற அவருக்கு தகுதி இருந்தது. அவரிடம் ‘ஏ’ வகை உரிமம் இருந்தது. அதனால் அவர் நீண்ட துப்பாக்கிகளை வைத்திருந்தார்.துப்பாக்கி உரிமத்தைப் பொறுத்தவரை, ஒரு நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்க தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த துப்பாக்கி பதிவகம் அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக ஆய்வு செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சிட்னி போலீஸ் அதிகாரி கிறிஸ் மின்ஸ் கூறுகையில்,
“இந்த தாக்குதல் சம்பவம் சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூர தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது” என்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,“சுமார் 10 நிமிடங்களாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அது சாதாரண துப்பாக்கியின் சத்தம் அல்ல. ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தின் சத்தம் போல இருந்தது.துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு, இறந்த நிலையிலும் காயமடைந்த நிலையிலும் கிடந்தவர்களை நாங்கள் பார்த்தோம்” என்றனர்.இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வந்த காரில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போண்டி கடற்கரை தாக்குதலை தீவிரவாத சம்பவமாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், 8 நாட்கள் நடைபெறும் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் போது நடந்துள்ளது. இந்த பண்டிகையின் முதல் நாள் இரவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹனுக்கா பண்டிகை தொடக்க நிகழ்வுக்காக சுமார் 1,000 பேர் கடற்கரையில் கூடியிருந்தபோது, உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த நவீத் அக்ரம் குணமடைந்த பிறகு, அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






