நைஜீரியா: மணப்பெண் உள்பட 13 பெண்களை கடத்தி சென்ற ஆயுத கும்பல் - பரபரப்பு சம்பவம்

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீப நாட்களாக நைஜீரியாவில் பள்ளிக்குழந்தைகள், பொதுமக்களை ஆயுத கும்பல்கள் கடத்தி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் சொகோடா மாகாணத்தில் உள்ள சாஜோ கிராமத்தில் நேற்று இளம்பெண்ணுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சிக்காக நேற்று முன் தினம் இரவு திருமணம் முன் ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, திருமணம் நடைபெறும் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மணப்பெண் மற்றும் மணப்பெண் தோழிகள் என 13 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்ட பெண்களை மீட்கும் பணியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.






