‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது’ - எலான் மஸ்க்

சமூகத்திற்கு பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கை மற்றும் தொழில்முனைவு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“அமெரிக்காவில் குடியேறிய திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது. அதாவது இந்திய திறமையின் மிகப்பெரிய பயனாளியாக அமெரிக்கா இருந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் எல்லை கட்டுப்பாடுகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. எல்லையில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கும். அதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை திறமைசாலிகளுக்கு எப்போதுமே பற்றாக்குறை இருந்து வருகிறது. அந்த வெற்றிடத்தை வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் நிரப்புகிறார்கள். எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை நாங்கள் உலகில் உள்ள திறமைசாலிகளை கண்டறிந்து பயன்படுத்த விரும்புகிறோம்.
தொழில்முனைவோர் எப்போதும் கடுமையாக உழைக்க வேண்டும். தோல்விகளுக்கு தயாராக இருக்க வேண்டும். புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் ரசிகன் நான். எனவே, பெரிதாக சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு எப்போதும் எனது மரியாதை உண்டு. சமூகத்திற்கு பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருப்பது சிறந்தது.
நீங்கள் மகிழ்ச்சியை நேரடியாக தேட முடியாது. உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை நீங்கள் தேடிச் செல்லும்போது மகிழ்ச்சி தானாக வரும். அதே போல், நேரடியாக பணத்தை தேடிச் செல்வதை விட, சமூக பயன்பாட்டிற்கான பொருட்கள் அல்லது சேவைகளை உருவாக்கும்போது அதில் வருமானமும் தானாக வரும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






