ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு; ஆதரவு கரம் நீட்டிய இந்தியா


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு; ஆதரவு கரம் நீட்டிய இந்தியா
x
தினத்தந்தி 1 Sept 2025 3:09 PM IST (Updated: 1 Sept 2025 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவு துறை மந்திரியும் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானின் கிழக்கே நேற்று இரவு 11.47 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்களால் நகங்கர் மாகாணத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. 2,500 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலநடுக்கம் தொடர்ச்சியாக, குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்து விட்டது என தலீபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தருணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஆதரவையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த கடின தருணத்தில், வேதனையிலுள்ள குடும்பத்தினருடன் எங்களுடைய நினைவுகளும், வேண்டுதல்களும் உள்ளன. காயமடைந்தவர்களுக்கு அனைத்து சாத்தியப்பட்ட மனிதாபிமான உதவிகளையும், நிவாரண உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என்ற உறுதியை மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விஷயம். அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். இந்த தேவையான நேரத்தில் இந்தியா தன்னுடைய உதவியை வழங்கும்.

பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story