ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகள் - இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
டெல் அவிவ்,
காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொடர்ந்து மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டிகள் எழுந்து வரும் நிலையில், எதிர்ப்புகளை மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகிறது.
இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை அமைப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கரையில் குடியேற்ற விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுத்து வரும் இஸ்ரேல் நிதி மந்திரி பெட்சலெல் ஸ்மோட்ரிச் இது குறித்து கூறுகையில், இந்த புதிய குடியேற்றங்களில் 2005-ம் ஆண்டு விலகல் திட்டத்தின்போது காலி செய்யப்பட்ட இரண்டு குடியேற்றங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு கரையில் 141 ஆக இருந்த யூத குடியிருப்பு எண்ணிக்கை, தற்போது 210 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு பகுதிகள் பெரும்பாலும் சட்டவிரோதமானவையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.






