அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

கோப்புப்படம்
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
இன்று (21-10-2025) காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (22-10-2025) மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில், வடதமிழக-புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும் நேற்று (20-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (21-10-2025) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.






