இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

கோப்புப்படம்
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நேற்று முன்தினம் (03-11-2025) காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (04-11-2025) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), வடக்கு- வடமேற்கு திசையில், மியான்மார் நகரக்கூடும். பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கனமழை
இந்நிலையில் இன்று (05-11-2025) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையில் இன்று (05-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
காலை 10 மணி வரை
இந்நிலையில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.






