வட மாவட்டங்களை ஏமாற்றிய டிட்வா புயல்... இனி மழைக்கான வாய்ப்பு எப்படி.?

வறண்ட காற்று ஊடுருவியதால் வானிலை மாறி டிட்வா புயல் வலுவிழந்தது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, இலங்கையை ஒட்டிய பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இலங்கையில் மழையை வாரி வழங்கி துவம்சம் செய்தது.
இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக இப்போதும் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. இலங்கையில் டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந் தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.
வலுவிழந்த புயல்
மேலும் தன்னுடைய பாதையில் முன்னோக்கி செல்ல ஆரம்பித்த புயல் 29-ந் தேதி (நேற்று முன்தினம்) சென்னை மற்றும் அதனையொட்டிய கடலோரப்பகுதிகளுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளை அது எதிர்கொண்டது. வறண்ட காற்று ஊடுருவல் புயலின் மையப்பகுதியில் குறுக்கிட்டதால், ஈரப்பதத்துடன் கூடிய காற்று அங்கு இல்லாமல் போய்விட்டது. இதனால் மழைக்கான மேகக்குவியல்களை உருவாக்க முடியாமல் புயல் திணறியது. புயலின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும், அது மழையை கொடுக்கும் அளவுக்கு ஈரப்பதத்தை பெற முடியாத சூழலும் ஏற்பட்டது.
டிட்வா புயலால் காற்று பாதிப்பு இருக்காது என்றாலும், மழையை கொடுக்கும் நிகழ்வாக இருக்கும் என சொல்லப்பட்டு இருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில், குறைந்து போய் இருந்த மழை அளவை இது பூர்த்தி செய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
வட தமிழக மாவட்டங்களில் ஏமாற்றம்
வறண்ட காற்று ஊடுருவல் இல்லாமல், ஏற்கனவே குறித்திருந்த இலக்கை நோக்கிய பாதையில் இது பயணித்து வந்திருந்தால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை இருந்திருக்கும். ஆனால் இடையில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தினால் டிட்வா புயல், நேற்று மழையை கொடுக்காமல் ‘டாட்டா' காட்டியது. இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தும், டிட்வா புயல் வலுவிழக்காமல் புயலாகவே தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக பயணித்ததை பார்க்க முடிந்தது. நேற்று இரவு வரையில் டிட்வா, புயலுக்கான அழகான அமைப்பை பெற்றிருந்தாலும், மேகக்கூட்டங்கள் இல்லாமல் செயலற்ற புயலாக புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நேற்று இரவு வரை நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று இரவு வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
இனி மழைக்கு வாய்ப்பு எப்படி?
டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாகவே சென்று வலுவிழந்தாலும், சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) வரை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதன்பிறகு, வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டு, மீண்டும் 3-வது வாரத்தில் பருவமழை வேகம் எடுத்து, 4-வது வாரம் தொடக்கத்தில் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.






